’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்!’ அடுத்த ப்ளான் இதுதான்!
”மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்த அமித்ஷாவின் இந்தப் பயணம், 2026 தேர்தல் உத்திகளை வகுப்பதற்கும், பாஜகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது”

நேற்றிரவு மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம்
அமித்ஷா இன்று காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்தார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தரிசனத்திற்குப் பின்னர், அவர் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்குத் திரும்பினார்.
பாஜக நிர்வாகிகள் கூட்டம்
மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் திடலில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜகவின் 13 அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மண்டல நிர்வாகிகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மதுரை, நெல்லை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மண்டலத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், ஐடி பிரிவு, மகளிர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகளை அமித்ஷா தனித்தனியாக சந்தித்து, தொகுதி நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கிறார்.