Tamil News  /  Tamilnadu  /  Allowed To Sell Dairy Products Packed In Plastic
ஆவின் பால்
ஆவின் பால்

Milk Products in Plastic: பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி!

31 August 2022, 10:05 ISTDivya Sekar
31 August 2022, 10:05 IST

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிப்பதாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது நீதிபதிகள் கூறும்போது, பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தும் நாம் அதை வாங்கி உண்கிறோம் என்பது கவலையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் கவர்களில் பால் விற்பனை செய்யப்படுவதை ஏன் தடுக்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பினர்.

அமுல், நெஸ்ட்லே போன்ற நிறுவனங்கள் டெட்ரா பேக்கில் பொருட்களை விற்பனை செய்வது போல ஆவின் நிறுவனமும் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு தமிழக அரசு தரப்பில், உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றால் அதனை தடை செய்ய தயார் என்றும், இதுகுறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வாட்டர் கேன்களின் சுகாதாரம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உணவு பாதுகாப்பு விதிகளில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க அனுமதிப்பதாகவும், ஆவின் நிறுவனம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்க ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக 33.84 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக 384 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 27.62 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 363 உரிமையியல் வழக்குகளில் 54.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு எதிராக 13 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, 1.79 லட்சம் ரூபாய் அபராதமும், 492 உரிமையியல் வழக்குகளில் 61.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்