நாயாறு ஓடையில் வீணாகக் கடலில் கலக்கும் நீர்.. தடுப்பணை அமைத்தால் 2 ஒன்றியங்களுக்கு பயன்!
வெண்ணத்தூர் பெரிய கண்மாய் நிறைந்த பிறகு, சம்பை, பத்தனேந்தல் ஆகிய இரண்டு பொதுப்பணித்துறை கண்மாய்க்கும், சின்னக் கோயில் கண்மாய் சித்தனேந்தல் ஆகிய இரண்டு யூனியன் கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்தூர் பொதுப்பணித்துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்பில், விவசாயிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் அவர்கள் அளித்த தகவலின் படி, ‘குன்னத்தூர், மருதூர், கருப்பூர், பொட்டகவயல், சிறுகுடி, குளங்குளம், வேலாங்குளம், முள்ளிக்குடி, ஆட்டான்குடி, வாகவயல், சீனாங்குடி ஆகிய 11 கண்மாய்களின் உபரி நீரும் நஞ்சை கழிவுநீரும் சேர்ந்து நாயாறு ஓடையாக உருவெடுக்கிறது.
சித்திரையில் ஊற்றெடுக்கும் மடை நீர்
இராமநாதபுரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணத்தூர் டோல்கேட் பெரிய பாலம் வழியாக நாயாறு ஓடை செல்கிறது. வெண்ணத்தூர் கால்வாய் முகப்பில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருப்பாலைக்குடிக்கு தெற்கில் கடலில் கலக்கிறது. இன்று சித்திரை மாதம், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட ஓடையில் ஊற்றெடுத்து ஒரு மடைத் தண்ணீர் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.