ADMK VS DMK: ’பாஜக, காங்கிரஸ் உடன் முதுகு வளைந்து சேவை செய்ததை முதலமைச்சர் மறந்துவிட வேண்டாம்!’ ஜெயக்குமார்
அதே நாள், அறிவாலயத்தின் மேல்தளத்தில் CBI விசாரணை, கீழ் தளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள் கேட்ட தொகுதிகளையும், கேட்ட இடங்களையும் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி, கூட்டணியை இறுதி செய்த தைரியசாலி தலைவன் யார்?

தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவதுபோல், தங்களின் நிலைபாட்டையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்து உள்ளார்.
மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 23.1.2025 அன்று, விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை உரிய ஆதாரங்களுடன் அறிக்கை வாயிலாக வெளியிட்டார். விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில், 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டிவிட்டு, 23.1.2025 அன்று சிவகங்கையில் புதியதாக ஒரு புள்ளி விவரத்தை திருவாய் மலர்ந்திருப்பது, இவர்களுடைய மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. திரு. ஸ்டாலின் 2019-ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் திண்ணையில் அமர்ந்து போட்டோ ஷூட் நடத்தி புகார் பெட்டி வைத்து மனுக்களை வாங்கினார். அப்போது, மனுவில் உள்ள கோரிக்கைகளைப் படிக்காமல், எழுதிக் கொடுத்த நாடக வசனத்தைப் பேசி ஜோக்கராகக் காட்சியளித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.
புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்!
2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய இரு ஆண்டுகள் பற்றாக்குறை I பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு, 2011-ம் ஆண்டு உபரி நிதியை விட்டுச்சென்றதாக பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், அரசு நிகழ்ச்சியில் கொஞ்சங்கூட கூச்சப்படாமல் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். 2021 இறுதியில், ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், பொம்மை முதலமைச்சருடன் சுகாதாரத் துறை, அறநிலையத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை மந்திரிகள் சென்னை மாநகரில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று மார்தட்டிவிட்டு பின்னாளில், பல நாட்கள் தண்ணீர் தேங்கியபோது விழிபிதுங்கி நின்றனர். திமுக-வின் மானம் கப்பலேறியது. திரு. ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி மக்களும் படகு சவாரி செய்ததை யாரும் மறக்கவில்லை.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த பதில்?
திரு. ஸ்டாலின் சிவகங்கையில் பேசியதற்கு, அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உரிய ஆதாரங்களுடன் தெளிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், சிவகங்கையில் புள்ளி விவரத்தோடு பேசினார் என்று மந்திரி திரு. நேரு குறிப்பிட்டு, அதற்கு நேரடியான பதிலைத் தர வக்கில்லாத நகராட்சி நிர்வாகத் துறை மந்திரி, புகார் பெட்டி மூலம் 2.29 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதாகவும்; 100 நாட்களில் அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டாலே, தீர்வு காணப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா? யாரை ஏமாற்றுவதற்கு இந்த பதில்?
புகார் பெட்டிக்கு மட்டும் திமுக மந்திரி பதில் அளித்தது ஏன்?
எங்களது கேள்வியெல்லாம், 2.29 லட்சம் மனுதாரர்களின் கோரிக்கைகள் என்னென்ன? அவற்றை எப்படி தீர்த்து வைத்தீர்கள்? உதாரணமாக, 229 லட்சம் மனுக்களில் அரசு வேலை கோரிய மனுக்கள் எத்தனை ? அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டது? அதேபோல், நிதியுதவி கோரிக்கைகள், குடியிருக்கும் (நீர்நிலை புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு போன்றவை) இடத்திற்கு பட்டா கோருதல், நில அபகரிப்பு புகார் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்பதை மந்திரி விளக்குவாரா? மேலும், அண்ணன் எடப்பாடியாரின் அறிக்கையில், திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பது பற்றியும்; திமுக-வின் பொம்மை முதலமைச்சர் பொதுவெளியில் முன்னுக்குப் பின் முரணான எண்ணிக்கை வெளியிட்டது குறித்தும், 2011-ல் உபரி வருவாய் விட்டுச் சென்றதாக பொய் பேசியது பற்றியும்; 1999-ல் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து மத்தியில் திமுக குடும்பத்தினர் மந்திரி பதவி பெற்றது; தொடர்ந்து, 2004 மற்றும் 2009-ல் டெல்லியில் முகாமிட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு மந்திரி பதவி வாங்கியது மற்றும் விடியா திமுக ஆட்சியில் குழுக்கள் அமைத்து, அதன்மூலம் கண்ட தீர்வுகள் குறித்து வெள்ளை அறிக்கை கோரியது உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளையும் புறக்கணித்துவிட்டு, புகார் பெட்டிக்கு மட்டும் திமுக மந்திரி பதில் அளித்தது ஏன்?
பதுங்கிய வீரமான தனையன் யார்?
அதேபோல் ஊரக வளர்ச்சித் துறை மந்திரி திரு. ஐ. பெரியசாமி நேற்று CBI அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டுக்கு பயந்து நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்று பேசியுள்ளார். 2001ல், இரவு 1 மணியளவில் திரு. கருணாநிதியை கைது செய்தபோது, ஐயோ கொல்றாங்களே! கொல்றாங்களே! என்று நடுரோட்டில் உட்கார்ந்து கதறியது எந்தவிதமான தைரியம்? தனது தந்தை கைது செய்யப்பட்டபோது, தான் தப்பிப்பதற்காக கைதுக்கு பயந்து இரவோடு இரவாக வாடகை கார் பிடித்து பெங்களூரு சென்று தலை மறைவாக பதுங்கிய வீரமான தனையன் யார்?
2 ஜி வழக்கில் திருமதி தயாளு அம்மாள் அவர்களை விசாரிப்பதற்காக உத்தரவிட்ட போது, CBI விசாரணைக்கு பயந்து, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தப்பிக்க வைத்த அந்த தைரியசாலி யார்?
அதே நாள், அறிவாலயத்தின் மேல்தளத்தில் CBI விசாரணை, கீழ் தளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்கள் கேட்ட தொகுதிகளையும், கேட்ட இடங்களையும் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி, கூட்டணியை இறுதி செய்த தைரியசாலி தலைவன் யார்?
எதிர்க்கட்சி என்றால் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவதும்; ஆளும் கட்சி என்றால் வெள்ளைக் குடை பிடித்த தைரியமான தலைவன் யார்?
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றால், 39 M.P-க்களை போராட வைக்காமல், பெஞ்ச் தேய்க்க வைக்கும் தைரியசாலி யார்? கல்வித் துறைக்கு (RMSA திட்டத்திற்கு) நிதி தரவில்லை என்றால், இதை எதிர்த்து எங்கே போராடினார்கள்?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், தேவையான நேரங்களில் எல்லாம் மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது. ஆட்சியில் இருந்தபோது, 2018-ல் அஇஅதிமுக M.P-க்கள், 22 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி, 1.6.2018 அன்று காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்ததையும், அணை பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராகக் குரல் கொடுத்து, அந்த மசோதாவையே நிறுத்தி வைத்ததையும், தற்போது UGC Regulation-க்கு எதிராக குரல் கொடுத்ததையும், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்ததையும், விடியா திமுக-வின் மந்திரிகள் மறந்துவிட்டனர்.
தமிழகத்தின் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைக் கடுமையாக எதிர்க்கும்.
எனவே திமுக, மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்காக பாஜக-வுடனும்; பிறகு காங்கிரசுடனும் முதுகு வளைந்து சேவை செய்ததை விடியா திமுக அரசின் முதலமைச்சரும், மந்திரிகளும் மறந்துவிடக்கூடாது. மத்தியில் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கும், தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், பச்சோந்தி அடிக்கடி நிறம் மாறுவதுபோல், தங்களின் நிலைபாட்டையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தமிழகத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற முயற்சியுங்கள்.
