‘தனிப்பெருமான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’ ஈபிஎஸ் பேச்சால் பாஜக அதிர்ச்சி!
"அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது," என்று உறுதியாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கடந்த காலத்தில் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அதிமுகவை உடைக்க முடியவில்லை என்றார்.

2026-ல் அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக கொடி ஏற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு மக்கள் விரோத ஆட்சியாக உள்ளதாகவும், பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகவும் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவின் பொய் வாக்குறுதிகள்
எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு 525 அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார். "பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாகவும், ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாகவும் திமுக கூறியது. ஆனால், இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நேர்மையாக மக்களை சந்திக்கவில்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.