’திருப்போரூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு! அதிமுக ஆர்ப்பாட்டம்!’ ஈபிஎஸ் அறிவிப்பு!
”இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிரணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி. பா. வளர்மதி அவர்கள் தலைமையில் நடைபெறும்”

திருப்போரூர் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிப்பிற்கு எதிராக ஜூலை 9 ஆம் தேதி அன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திருப்போரூர் தொகுதியில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய, நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, ஜூலை 9, 2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் குறித்துத் தெரிவித்துள்ளார். திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதன் காரணமாக, மக்கள் சொல்லொணா வேதனையை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இதுதொடர்பாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.