DMK vs AIADMK : ‘நேற்று அறிவித்து.. இன்று போராட்டமா.. சட்டத்தை வளைக்காதீங்க’ அதிமுக காட்டம்!
‘போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதுவும் போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும். இது தான் காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடு’ -முதல்வர்
அண்ணா பல்கலை கழக மாணவிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானித்தில், அதிமுக எதிர் கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசினார். அப்போது, ‘மாணவி விவகாரம் தொடர்பாக, அவருக்கு நியாம் வேண்டி போராடும் எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பதும், கைது செய்யப்படுவது’ குறித்து உதயக்குமார் கேள்வி எழுப்பினார்.
சட்டத்தை வளைக்காதீர்கள்
‘‘ஆளும் கட்சிக்கு ஒரு நீதி? எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? மாலையில் ஆளும் கட்சி போராட்டம் அறிவித்து காலையில் நடத்துகிறது; சட்டத்தை வளைக்காதீர்கள்’’ என்று, அப்போது ஆர்.பி.உதயக்குமார் கடுமையாக பேசினார். பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியும் அதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அதன் பின் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அதுவும் போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் போராட்டம் நடத்த வேண்டும். இது தான் காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடு. நேற்று கூட ஆளும் திமுகவினர் போராட்டம் நடத்திய போது, அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என்று முதல்வர் விளக்கம் அளித்தார்.
‘எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு முன் கூட்டியே அனுமதியளித்த நிலையில், அதற்கு போலீஸ் அனுமதி மறுப்பதும், ஆளுங்கட்சியினர் அறிவித்து விட்டு போராட்டம் செய்யும் போது, அதற்கு போலீசார் அனுமதி அளிப்பதற்கும்’ எதிர்ப்பு தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தான், அது தொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் அரங்கேறியுள்ளது.
அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் போது, அல்லது போராட்டம் நடத்த முயற்சித்தப் போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், திமுகவினர் போராட்டம் நடத்திய போது, அவர்கள் மீது வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்பட்டதாகவும் எதிர்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு உள்ளது.