’உளறும் ஸ்டாலின்! கதறும் துரைமுருகன்! யார் அந்த சார்?’ திமுக போஸ்டருக்கு பதிலடியாக அதிமுக வெளியிட்ட கார்ட்டூன் வீடியோ!
ஆளுநர் விவகாரத்தில் திமுக வெளியிட்ட போஸ்டருக்கு பதிலடியாக அதிமுக சார்பில் கார்ட்டூன் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது!
”தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்! அவரை காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி” என சென்னை முழுவதும் திமுக போஸ்டர் ஒட்டிய நிலையில் அதற்கு பதிலடியாக முதலமைச்சர் ஸ்டாலினை கிண்டல் செய்து அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி கார்ட்டூன் வீடியோ வெளியிட்டு உள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் மாநகரம் முழுவதும் ”தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர்! அவரை காப்பாற்றும் அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி” என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், ’SIR நான் கோஷம் போடுற மாதிரி போடுறன்…! நீங்க நேக்க வெளிய போய்டுங்க’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கைகளை கட்டியபடி கூறுவது போலவும், அதற்கு ‘சூப்பர்யா…! நீதான்யா உண்மையான விசுவாசி’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது போலவும், இவர்களின் உரையாடலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூரத்தில் நின்று கேட்பது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்தை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இன்று ஆர்பாட்டம் நடத்திய நிலையில், சென்னை மாநகரில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரும் பெரும் பேசுபொருள் ஆனது. இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுக ஐடி விங் சார்பில் கார்ட்டூன் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என் கட்சிக்காரன் இல்லை என்று சொல்லி தூக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்புவது போலவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் ‘யார் அந்த சார்?’ என்று கேள்வி எழுப்புவது போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.