ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!
“காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும் தயங்கமாட்டோம். அ.தி.மு.க. இளைஞர்கள் மத்தியில் இந்த கார்ட்டூன் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் அ.தி.மு.க. தரம்தாழ்ந்து விமர்சிக்காது என்று ராஜ்சத்யன் தெரிவித்தார்”

கீழடி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறான கார்ட்டூனை வெளியிட்டதாக திமுக ஐ.டி.விங் மீது அதிமுக ஐ.டி.விங் புகார் அளித்து உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. ஐ.டி. விங் அவதூறான கார்ட்டூனை வெளியிட்டதாக அ.தி.மு.க. இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கழகங்கள், ஐ.டி. விங் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, அ.தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் ராஜ் சத்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஐ.டி. விங் வெளியிட்ட கார்ட்டூன், “மிக தரம் குறைந்த, இகழ்வான” முறையில் இருப்பதாகவும், இது அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மறைத்து, மக்களை திசை திருப்புவதற்கான “மடைமாற்று அரசியல்” என்றும் குற்றம்சாட்டினர்.