நெருங்கும் தேர்தல் களம்.. முந்தும் இபிஎஸ்.. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்..? வெளியான ஹாட் சர்வே ரிப்போர்ட்!
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் இருக்கும் நிலையிலே, ஸ்டாலினை இபிஎஸ் நெருங்கிவிட்டார் என்பது அதிமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே கட்சிகளுக்கிடையே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் சர்வே ரிப்போர்ட் வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி, வாக்குறுதிகள், பரப்புரை போன்றவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுகவும் அதிமுகவும் தங்களது திட்டங்களை வகுத்து வருகிறது. அவர்களுக்கு இணையாக அதன் கூட்டணி கட்சிகளும், புதிதாக வந்த கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க ஆவண செய்ய திட்டமிட்டு ஆலோசித்து வருகின்றன.
கட்சிகளும் கூட்டணியும்
இந்த சமயத்தில் தான், அதிமுகவினர் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகளை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். அந்த அறிக்கை படி, திமுக கூட்டணியில் ஏழு கட்சிகள் உறுதியாக நிற்கின்றன. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இப்போது பாஜ மட்டுமே இணைந்துள்ளது. பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்குக் காத்திருக்கின்றன. இந்த சூழலில் வெளியாகியிருக்கும் சர்வே, திமுக வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகிறது.