தேசிய கல்விக் கொள்கை: 'துரோகம் இழைக்கும் மத்திய அரசு!’ பாஜகவுக்கு எதிராக சீறிய எடப்பாடி பழனிசாமி
மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற மத்திய அரசு வலியுறுத்துவது, தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் மீது கோபம்
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காவிடில், மத்திய அரசின் நிதியான ரூபாய் ஐந்தாயிரம் கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.