ADMK: ’தவழ்ந்து தவழ்ந்துதான் உயர்ந்த பதவிக்கு வந்தேன்!’ SDPI மாநாட்டில் EPS பேச்சால் பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: ’தவழ்ந்து தவழ்ந்துதான் உயர்ந்த பதவிக்கு வந்தேன்!’ Sdpi மாநாட்டில் Eps பேச்சால் பரபரப்பு!

ADMK: ’தவழ்ந்து தவழ்ந்துதான் உயர்ந்த பதவிக்கு வந்தேன்!’ SDPI மாநாட்டில் EPS பேச்சால் பரபரப்பு!

Kathiravan V HT Tamil
Published Jan 07, 2024 07:28 PM IST

”நான் கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக ஆனேன்”

வி.கே.சசிகலா உடன் ஈபிஎஸ் (கோப்புப்படம்) - SDPI மாநாட்டில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வி.கே.சசிகலா உடன் ஈபிஎஸ் (கோப்புப்படம்) - SDPI மாநாட்டில் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

நான் முதலமைச்சர் ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை போல் நானும் அமர்ந்து இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதைக்கூட இன்றைய முதலமைச்சர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்ன என்று தெரியாத முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். 

நான் கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக ஆனேன். ஆனால் உங்கள் அப்பா முதலமைச்சராக இருந்ததால் நீ இன்று முதலமைச்சராக ஆகி உள்ளார்.  நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றி கவலைப்படுபவராக முதலமைச்சராக உள்ளார். 

இன்றைக்கு நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறுகிறார்கள். மூன்றாயிரம் பேரா தொழில் செய்ய வருகிறார்கள். இது ஃபோர்ஜெரி, ஏற்கெனவே நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெற்ற முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?; மக்களை ஏமாற்றுவது என்பது திமுகவுக்கு கைவந்த கலை. 

கருணாநிதி ஆட்சி செய்தார், பின்னர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். இப்போது அவரது மகன் ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார். ஆனால் நாட்டு மக்கள் குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது. 

ஒரு நிதியமைச்சர், மெத்தப்படித்தவர், பொருளாதார நிபுணர் சொல்கிறார். உதயநிதி அவர்களும், சபரீசன் அவர்களும் 30 ஆயிரம் கோடியை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறுவதாக கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்ததுதான் திமுகவின் சாதனையாக மக்கள் பார்க்கிறார்கள். இந்த பணத்தை சிறுபான்மை மக்களின் வளத்திற்கு பயன்பட்டு இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உங்களை பாராட்டி இருப்பார்கள்.