‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவோர் தான் அப்பா.. அப்பா.. என கதறுகிறார்கள்’ இபிஎஸ் பேச்சு!
‘திமுக அங்கம் வகித்துள்ள இந்தியா கூட்டணி ஒற்றுமையில்லாமல் சிதறி வருகிறது. இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்துகொண்டே, கலைஞர் நாணயம் வெளியிட பாஜக மத்திய அமைச்சரை அழைக்கிறார். இது தான் திமுகவின் இரட்டை வேடம்’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்,’’ என்று வேலூரில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் மண்டல மாநாடு நடந்தது. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவரும் அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி,முக்கூர் சுப்பிரமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘நாங்கள் பாஜகவின் குரலா?’
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அதிமுக பாசறை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் குரலை நான் ஒலிப்பதாக பேசுகிறார். நாங்கள் எந்த கூட்டணியையும் சார்ந்தில்லை. எங்களை நாடி தான் எல்லோரும் வருவார்கள். நாங்கள் தேர்தல் சமயத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி அமைக்கிறோம். அதிமுக மக்களை நம்பியுள்ள கட்சி. ஆனால், திமுக கூட்டணியை நம்பியுள்ள கட்சி. எங்களை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு.
திமுக அங்கம் வகித்துள்ள இந்தியா கூட்டணி ஒற்றுமையில்லாமல் சிதறி வருகிறது. இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்துகொண்டே, கலைஞர் நாணயம் வெளியிட பாஜக மத்திய அமைச்சரை அழைக்கிறார். இது தான் திமுகவின் இரட்டை வேடம். எதிர்க்கட்சியாக இருந்த போது கருப்பு பலூன் பறக்கவிட்டு, கோபேக் மோடி என சொன்னவர், தற்போது ஆளுங்கட்சி ஊழல்களில் சிக்க கூடாது என்பதற்காக மோடியை வெள்ளைக் குடை கொண்டு வரவேற்கிறார்.
அரசை பார்க்க வேண்டாம்.. மக்களை பாருங்கள்
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதிகளை ஒதுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். மக்களாகிய நீங்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களாக திமுகவைச் சேர்ந்தவர்களை வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் அவர்கள் நிதியை பெற நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அங்கு கேட்காமல், முதல்வர் தொடர்ந்து நிதியை மத்திய அரசு தரவில்லை என கூறுகிறார். மத்திய அரசு, இங்கு ஆளும் கட்சியை பார்க்க வேண்டாம், இங்குள்ள ஏழை மக்களை பார்த்து நூறு நாள் வேலைக்கான நிதியினை உடனடியாக வழங்க வேண்டும்.
அனைவரும் என்னை அப்பா என அழைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் தமிழகத்தில் தான் அதிக அளவில் இளம் சிறார்கள் பாலியல் வன் கொடுமைகள் நடக்கிறது. அப்போது இளம் பெண்களும், சிறார்களும் ‘அப்பா.. அப்பா..’ என, கதறுவது முதல்வர் காதில் கேட்கவில்லையா? நாங்கள் இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும்,’’ என்று அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
