‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?
இந்த சந்திப்பில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக்கான முக்கிய அம்சங்கள், கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் 2 மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி இணையும் சூழல் உருவாகியுள்ளது. இந்த 2 மணி நேர சந்திப்பில் முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் எம்.பி., தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை குழுவாக சந்தித்த அமித்ஷா, அதன் பின் மற்றவர்களை அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நேரம் தனிமையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக்கான முக்கிய அம்சங்கள், கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் பேசியது என்ன?
- ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஒத்துழைக்குமாறு அமித்ஷா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்
- ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஏற்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருக்கிறாராம்
- திமுக மீதான ஊழல் விவகாரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமிஷ்தா கூறியிருப்பதாக கூறப்படுகிறது
- முந்தைய என்டிஏ கூட்டணி உடன் மேலும் சில கட்சிகளை இணைக்க பேசியுள்ளனர்
- தமிழக பாஜக தலைமை குறித்த விவாதமும் அங்கு நடந்ததாக கூறப்படுகிறது
- அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என்கிற உத்தரவாதத்தை அமித்ஷா கொடுத்ததாக கூறப்படுகிறது
- எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது
- 200 தொகுதிகளுக்கு மேல் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை அமித்ஷா வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- இது தவிர, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டதாம்
இருப்பினும் இருதரப்பிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர்களின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
