EPS vs Stalin: ‘ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை’ ஸ்டாலினை கடுமையாக சாடிய இபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Eps Vs Stalin: ‘ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை’ ஸ்டாலினை கடுமையாக சாடிய இபிஎஸ்!

EPS vs Stalin: ‘ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை’ ஸ்டாலினை கடுமையாக சாடிய இபிஎஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 12, 2025 11:42 PM IST

EPS vs Stalin: அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

EPS vs Stalin: ‘ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை’ ஸ்டாலினை கடுமையாக சாடிய இபிஎஸ்!
EPS vs Stalin: ‘ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை’ ஸ்டாலினை கடுமையாக சாடிய இபிஎஸ்!

‘‘பா.ஜ.க. பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக, நேற்று (11.4.2025) மத்திய உள்துறை அமைச்சர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததையடுத்து ஸ்டாலின் அலறித் துடிக்கிறார்.

பா.ஜ.க. புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலைகள், தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து, கொலை செய்து கொள்ளை அடித்தல், மணல் கொள்ளை, மூன்று முறை சொத்து வரி தண்ணீர் வரி மின்கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்று, தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின்.

நான்காண்டுகளாக பொம்மை முதலமைச்சராக ஆட்சியை நடத்திவிட்டு, தற்போது கச்சத்தீவு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சிரமங்களை மடைமாற்ற முயலும் விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க. புகுந்துவிடும் என்றே நான்காண்டுகள் தமிழகத்தை ஸ்டாலின் சீரழித்ததை இனி தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை உணர்ந்ததால், தன்னிலை மறந்து புலம்பத் தொடங்கி இருக்கிறார்.

தொடர்ச்சியாக, மத்திய அமலாக்கத் துறையின் சோதனைகளுக்குள்ளான அமைச்சர்களைக் கொண்டு ஆட்சிபுரியும் இவர், இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க-வை அடகு வைத்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாக புழுதிவாரித் தூற்றுகிறார். என் மீதோ, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதோ மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியதாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? மற்றவர்களைப் பார்த்து குற்றம் சொல்லும் முன், 2ஜி ஊழலுக்காக சிறைக்குச் சென்றவர்கள், மந்திரியாக பதவி வகிக்கும்போதே சிறைக்குச் சென்றவர், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சிறையிலிருந்து வந்தவருக்கு தியாகி பட்டம் வழங்கி, மீண்டும் மந்திரி பதவி அளித்தது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லமை பெற்றது தி.மு.க. என்று நீதியரசர் சர்க்காரியாவால் சான்றிதழ் பெற்ற கூட்டம். வீராணம் திட்ட ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோடம்பாக்கத்தில் இருந்த அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியை தனியார் ஒருவருக்கு விற்று, பின்னர் அவரிடமிருந்து தி.மு.க. கட்சி பத்திரிகை பெயருக்கு மாற்றிய ஜகஜால ஊழல் என்று சர்க்காரியா கமிஷன் பட்டியலிட்டதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, CBI வழக்குகளில் இருந்து தப்பியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

2011, சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க-வின் அறிவாலய அலுவலக கீழ்தளத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மேல் தளத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் காங்கிரஸ் அரசு ரெய்டு நடத்தியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

அந்த ரெய்டுக்கு பயந்து 63 சீட்டுகளை காங்கிரசுக்குக் கொடுத்து, கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்ததைத்தான் தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?

அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

அண்ணா தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை, ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை வெளியிட்டிருப்பது வேடிக்கை. பொய் புரட்டுகளை அள்ளி வீசி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சேற்றை வாரி இறைத்து, எதிரணியில் இருப்பவர்களை தனித்தனியாக பிரித்து, தன்னிடம் உள்ள ஏவல் கட்சித் தலைவர்கள் துணையோடு மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு நாள்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஸ்டாலினின் தலையில், நேற்றைய அண்ணா தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு இடியை இறக்கி இருக்கிறது.

அது கொடுத்த வலியின் வேகம் தாங்காமல் ஸ்டாலின் துடிப்பதும், துவள்வதும் அவரது அறிக்கையில் இருந்து தெரிகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஸ்டாலினும், அவரது குடும்பமும், மந்திரிகளும் கடலையே குடித்திருக்கிறார்கள். 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இந்த கொள்ளைக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்,’

என்று எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.