சசிகலா, ஓபிஎஸை சேர்க்க பாஜகவிடம் இருந்து அழுத்தமா? உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!
"இன்று உயிரோடு இருப்பவர் நாளை இருப்பாரா என தெரியாத நிலை உள்ளது" என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பேசினார். திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.
மக்களை பாதிக்கும் வரி உயர்வு
"தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி 100% உயர்வு, கடைகளுக்கு 150% உயர்வு, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கைட்லைன் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்காண்டு ஆட்சியில் மக்களுக்கு பெரும் பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார்.
மேலும் படிக்க:- ’குற்றத்தை தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு’ விளாசும் அன்புமணி ராமதாஸ்!
தொகுதி மறுசீரமைப்பு: திமுகவின் கண் துடைப்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவை விமர்சித்த அவர், "இதை நாடாளுமன்றத்தில் தான் கேட்க வேண்டும். திமுக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியது. ஆனால், இப்போது சென்னையில் பல மாநில முதல்வர்களை அழைத்து நடத்திய நிகழ்ச்சி நடத்தி உள்ளது, லஞ்சம், ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை மறைப்பதற்காகவே நேற்றைய தினம் திமுக இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளது." என்று கூறினார்.
டாஸ்மாக் ஊழல்: 1000 கோடி முறைகேடு
"சட்டப்பேரவையில் எதை பேசினாலும் காட்ட மறுக்கிறார்கள். அமலாக்கத்துறை இன்று மதுபான விற்பனையில் 1000 கோடி முறைகேடு நடந்ததாக பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது நிரூபணமாகி உள்ளது. கலால் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது," என்று ஈபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் படிக்க:- Heavy Rain Alert: ’8 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அதிமுகவின் நிலைப்பாடு
சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை சேர்க்க பாஜக அழுத்தம் கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு “நீங்களாக கற்பனை செய்து கொண்டு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. 100 சதவீதம் அப்படி அல்ல; அதிமுகவை பொறுத்தவரை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்கள் சொன்ன நபர்களை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக இன்றுவரை அந்த திட்டம் இல்லை. எதிர்காலத்திலும் அப்படி கிடையாது” என்றார்.
பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படுமா?
பாமக தரப்பில் அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டு கேட்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு இன்னும் ராஜ்யசபா தேர்தலே அறிவிக்கப்படவில்லை. நீங்களாக ஒரு கற்பனையை உருவாக்கி கொண்டு பேசுகிறீர்கள். ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு அறிவிப்பு வந்தால் அதை பற்றி பேசுவோம். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு; கூட்டணி வேறு, தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்போம்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாக குற்றம் சாட்டிய அவர், "பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மது அருந்தும் சூழல் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. திருநெல்வேலியில் ஜாகிர் உசேன் தொழுகையை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டப்பட்டார். அவர் முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கொலைக்கு ஒரு நாள் முன்பு ஆடியோ வெளியிட்டு உதவி கோரினார். ஆனால், துப்பில்லாத இந்த அரசு தடுக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார். "இன்று உயிரோடு இருப்பவர் நாளை இருப்பாரா என தெரியாத நிலை உள்ளது," என்று கவலை தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: திமுகவுக்கு ஆர்வமில்லை
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய ஈபிஎஸ், "தெலுங்கானா, பீகார் அரசுகள் இதை செய்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஆறு மாத டேட்டா கொடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் இதை புதுப்பிக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதில் ஆர்வம் இல்லை. ஏதோ காரணம் சொல்லி தள்ளிப்போடுகிறார்," என்று விமர்சித்தார்.

டாபிக்ஸ்