தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk General Secretary Edappadi Palanisami Congratulated The Birth Of Thai Month

Pongal:'தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்' - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Marimuthu M HT Tamil
Jan 13, 2024 03:18 PM IST

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி
பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

பொங்கல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளின் முதல் பண்டிகையாக, போகிப் பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் (உழவர் திருநாள்) என நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.

உழவர் பெருமக்கள் இயற்கையின் அருளினாலும், கடின உழைப்பினாலும் விளைந்த நெற்கதிர், கரும்பு, வாழை, இஞ்சி, மஞ்சள் ஆகிய விளைபொருட்களை வைத்தும்; புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்தும், 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனுக்குப் படைத்து வழிபடுவதோடு, தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து பொங்கல் திருநாளைக் கொண்டாடுவார்கள்.

பிறருக்கு உணவு வழங்கி உண்ண நினைப்பது தெய்வப் பண்பாகும். அனைத்து மக்களுக்கும் உணவு கிடைத்திட அல்லும் பகலும் அயராது பாட்டுபட்டு வரும் உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள் ஆவார்கள். 

அத்தகைய உழவர் பெருமக்கள் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு நினைவுகூர விரும்புகிறேன்.

தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்'' என எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்