திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பேசப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவையொட்டி அவர் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கவுள்ளதாக பேசப்படும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு உதிரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.