AIADMK: டங்ஸ்டன் ஏலம் ரத்து: இபிஎஸ்.,க்கு நன்றி விழா.. நேரில் வந்து அழைத்த அரிட்டாபட்டி விவசாயிகள்!
AIADMK: மேலூர் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கான தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்து, தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு வரவேற்று, மேலூருக்கு வருகை தருமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டனர்.

AIADMK: டங்ஸ்டன் ஏலம் ரத்து தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அது தொடர்பாக அஇஅதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்வேறு கிராம விவசாயிகள் பங்கேற்பு
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்து, பொதுமக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, போராட்டங்களின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தமைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான `புரட்சித் தமிழர்’ எடப்பாடி மு.பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (28.1.2025 – செவ்வாய்க் கிழமை), டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிக்கப்பட இருந்த பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாலபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்தனர்.
ஊர்வலமாக இசைத்து வந்தனர்
அப்போது வாழைத் தார், பழங்கள், விதை நெல்மணிகள் ஆகியவற்றை வழங்கியும், விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டு மற்றும் முண்டாசு அணிவித்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்ததுடன், மேலூர் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கான தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்து, தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு வரவேற்று, மேலூருக்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, கட்சியின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் ஞ. பெரியபுள்ளான் (எ) செல்வம், உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தங்களின் பொருட்களை எடுத்து, பாரம்பரிய இசையோடு ஊர்வலமாக வந்த விவசாயிகள், எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் நன்றியை தெரிவித்தனர். விவசாயிகளின் நன்றியை, மகிழ்ந்த முகத்தோடு ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, புன்முகத்தோடு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டங்ஸ்டன் ஏலம் ரத்து தொடர்பாக, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், மதுரை மாவட்டம் பயணம் செய்து, அங்கு அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டி கிராம மக்களை சந்தித்தார். அங்கு அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே போல, பாஜக சார்பிலும் சம்மந்தப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையை செய்திகள்