'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே வைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இருந்து இன்று (ஏப்ரல்16) அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துடைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முயற்சித்தோம். அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இன்னும் ஓராண்டு இருக்கின்றன. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் வரும்.
இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நாங்கள் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல் வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.
மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள். நீங்கள் ஏதேதோ வித்தை காட்டுகிறீர்கள். நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளதாகவே இவ்வாறு குழப்பம் ஏற்பட்டுள்ளது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கவனம் பெறுகிறது. மேலும் வரும் மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் கூட்டணி தொடர்பாக ஈபிஎஸ் அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
