Amit Shah vs EPS: அமித்ஷாவை சந்தித்தது ஏன்?.. பாஜக - அதிமுக கூட்டணி பற்றி பேச்சா?.. டெல்லியில் ஈபிஎஸ் அளித்த பேட்டி!
மக்கள் பிரச்னைகள், நிதி ஒதுக்கீடுக்காக மட்டுமே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. இதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் எடுத்துரைத்தோம். மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்னைகள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்தோம்." என்றார்.
அப்போது அரசியல் ரீதியாக அமித்ஷாவிடம் பேசினீர்களா என்றும், அதிமுக பாஜக கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, " மக்கள் பிரச்னைகள், நிதி ஒதுக்கீடுக்காக மட்டுமே மத்திய அமைச்சரை சந்தித்தோம். கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. கூட்டணி வேறு; கொள்கை வேறு. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப மாறும். தேர்தல் நெருங்கும் போது என்ன சூழ்நிலை உள்ளதோ அதற்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும்." என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
முன்னதாக, சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பின் போது தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்," 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்." என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
