ADMK: ’துதிபாடும் போலீஸ்! தேர்தல் குறித்து சந்தேகம் கிளப்பும் ஜெயக்குமார்!
”ஆளும் கட்சிக்கு துதிபாடும் துறையாக காவல்துறை உள்ளது. திமுக பலவீனமாக உள்ள மாவட்டங்களில், ஆளுங்கட்சிக்கு சாதமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை நியமனம் செய்கிறார்கள்”

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் இந்தியத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்டோம். எங்கள் கருத்துக்ளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளோம்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர் எடுக்கப்படவில்லை, தகுதி உள்ள வாக்காளர்கள் பலர் சேர்க்கப்படவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறை பெரும்பாலும் காவல்துறைக்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே துணை ராணுவத்தை தேர்தல் பணிக்கு அமர்த்தி சுதந்திரமான ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
ஆளும் கட்சிக்கு துதிபாடும் துறையாக காவல்துறை உள்ளது. திமுக பலவீனமாக உள்ள மாவட்டங்களில், ஆளுங்கட்சிக்கு சாதமாக நடந்து கொள்ளும் அதிகாரிகளை நியமனம் செய்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் திருவண்ணாமலைக்கு மாற்றப்படுகிறார். அவரது எம்.பி தொகுதியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகள் வருகிறது.
கோடைக்காலங்கள் வாக்குப்பதிவு நடப்பாதால், தண்ணீர், பந்தல்களை அமைக்க வேண்டும். தேர்தல் மேற்பார்வையாளர்களாக வேறு மாநில அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வாக்குச்சாவடி மையம், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்களை வைக்க மாநில அளவில் டெண்டர் விடுகிறார்கள். அந்த டெண்டரை கட்சி சார்பில்லாதவர்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் திமுக அனுதாபிகளுக்கு இந்த டெண்டர் கொடுத்தால், முறைகெடு நடக்கும் சூழல் உண்டாகும் என கூறினார்.
