ADMK VS BJP: ’பாஜக உடன் கூட்டணி இல்லை’ டி.ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!
”உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு இங்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது”
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாமலைக்கு பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம்; அண்ணாமலையை இனி எங்கள் ஆட்கள் விடமாட்டார்கள்.
ஒரு கருத்து சொன்னால் ஓராயிரம் கருத்து பதிலடியாக வரும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம், அவரை கட்டுப்படுத்துங்கள் என்று மேலிடத்திலும் சொல்லி இருந்தோம். அதிமுக கூட்டணியை பாஜக தொண்டர்கள் விரும்புகிறார்கள்; ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை.
உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அண்ணாமலைக்கு இங்கு காலே கிடையாது. பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. கூட்டணியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் அதிமுக தற்போது இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்ய முடியும். இது எனது கட்சியின் கருத்துதான்.
அண்ணாமலை விமர்சனம் செய்த பின்னர் அது குறித்து பாஜக மேலிடத்தில் சொல்லி உள்ளோம். முன்பு இல.கணேசன், தமிழிசை இருந்த போது இது போன்ற பிரச்னைகள் இல்லை. ஆனால் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துகளை அண்ணாமலை பேசி வருகிறார்.
மாநிலக் கட்சித் தலைவராக இருக்க தகுதி இல்லாத நபராக அண்ணாமலை உள்ளார். அவர் தொல்லியல் துறையில் இருக்க வேண்டிய நபர். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்.
ஏற்கெனவே மாநிலத் தலைவரை அடக்கிவைக்க கோரி சொல்லி இருந்தோம். ஆனால் அப்படி சொல்லியும் அவர் அடங்கவில்லை என்றால் மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறார் என நினைக்கிறோம்.
இந்த கூட்டணி பிரிவால் எங்களுக்கு இழப்பு இல்லை; அவர்களுக்குத்தான் இழப்பு. பாஜக முதலில் நோட்டாவை ஜெயிக்க முடியுமா என்பதை பாருங்கள். அண்ணாமலையின் பேச்சை அவரது கட்சிக்காரர்களே ரசிக்கவில்லை. பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு ஒன் மேன் ஷோவை அண்ணாமலை நடத்தி வருகிறார்.
அண்ணாமலையின் ‘ஃபைல்ஸ்’ பூச்சாண்டிக்களுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக கிடையாது. எங்கள் கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பார்க்காத கோப்புகளா?