சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவரை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி, குற்றவாளியை காப்பாற்ற கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கைதான சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் உத்தரவில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், கைதான குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, காவல் ஆய்வாளர் ராஜி மற்றும் சென்னை அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டனர். நேற்று கைது செய்யப்பட்ட அவர்கள்,எழும்பூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரித்த மேஜிஸ்ட்ரேட் ராஜலட்சுமி, இருவருக்கும் ஜன.21ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி, குற்றவாளியை காப்பாற்ற கட்டப் பஞ்சாயத்து செய்ததாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கைதான சுதாகரை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுதாகர் அதிமுகவில் இருந்து நீக்கம்
‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், ( 103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்,’
என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.