Tirunelveli : நெல்லையில் பரபரப்பு.. அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை.. பேட்டையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சயத்து துணைத் தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பேட்டை போலீஸார் கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையை அடுத்த மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பிச்சை ராஜு (52). இவர் முன்னாள் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து உள்ளார்.
மேலும், இவர் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் நெல்லை மாநகராட்சி 18ஆவது வார்டு வேட்பாளராகவும் போட்டியிட்டார். இவர் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு பிச்சைராஜ் பேட்டை எம்.ஜி.ஆர் நகர் பாரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக சென்று உள்ளார்.
அப்போது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேட்டை காவல் நிலைய போலீசார், பிச்சை ராஜை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிச்சை ராஜ் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை மாநகரப் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்