AIADMK: ‘ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி போதும்’ எடப்பாடி கணக்கு சரியா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aiadmk: ‘ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி போதும்’ எடப்பாடி கணக்கு சரியா?

AIADMK: ‘ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி போதும்’ எடப்பாடி கணக்கு சரியா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 12, 2025 01:12 PM IST

AIADMK: ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளுக்காக காத்திருந்து காலம் போனதும், மீண்டும் விஜய் கட்சிக்காக காத்திருந்து, இறுதி கட்டத்தில் யாரும் இல்லாமல் தனித்து நின்றால், 2026 அதிமுகவுக்கு சவாலுக்கு மேல் சவால் ஆகிவிடும்.

AIADMK: ‘ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி போதும்’ எடப்பாடி கணக்கு சரியா?
AIADMK: ‘ஜனநாயகன் வேண்டாம்.. தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி போதும்’ எடப்பாடி கணக்கு சரியா?

கடைசி வரை முன்வராத கட்சிகள்

தமிழக அரசியல் களம் மட்டுமல்ல, இந்திய அரசியல் களமே கூட்டணி என்கிற குதிரையில் தான் பயணிக்கிறது. அதுவும் மாநில அரசியலில் கூட்டணி, தவிர்க்க முடியாததாக இருக்கிறது. திமுகவின் இன்றைய பலமும் கூட்டணி தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 சதவீத வாக்குகளில் ஆட்சியை இழந்தது அதிமுக. அதற்கு, சிறுபான்மையினரின் வாக்குகளும் முக்கிய காரணம் என கருதினார் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அங்கு தொடர்வதற்கு காரணம், பாஜக., இடையூறாக இருப்பதாகவும் அவர் எண்ணினார். பாஜகவை உதறினால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சில, தன் பக்கம் வரும் என்று நம்பினார். குறிப்பாக, கம்யூ.,கள் விசிக போன்றவை, தன்னுடன் இணையும் என காத்திருந்தார்.

மக்களவை தேர்தலில் அது நடக்கவில்லை. அதன் பிறகும், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. பாஜக வேண்டாம் என்று உதறிய தனக்கு, திமுக அணியில் இருக்கும் இஸ்லாமிய கட்சிகள் கூட ஆதரவு தரவில்லை என்கிற வருத்தம், எடப்பாடிக்கு வந்தது. கோந்து போல ஒட்டிக் கொண்டிருக்கும் திமுக கூட்டணி கட்சிகளை இனி அசைக்க முடியாது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்தார் எடப்பாடி. இப்போது, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க, கட்டாயம் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், குறிப்பிடும்படியான கட்சிகள், திமுக வசம் இருக்கிறது. இந்த பக்கம் திரும்பிப் பார்த்தால், பாஜக, நாம் தமிழர் தனியாக நிற்கிறார்கள். அப்போது தான், அவருக்கு ஒரு ஆப்ஷன் வந்தது, அது விஜய் ஆரம்பித்த தவெக.

ஒத்து வராமல் போன ஜனநாயகன்..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம், கட்சி தொடங்கிய நாள் முதல், அதிமுகவை விமர்சிக்கவில்லை. மாறாக, திமுகவையும், பாஜகவையும் தங்கள் எதிரி என பிரகடனம் செய்தார் விஜய். இது, ‘அதிமுக-தவெக’ கூட்டணியை இணைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலானோர், இந்த கூட்டணிக்கான இயற்கையான வாய்ப்பு இருப்பதாகவே கருதினார். பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பிரசாந்த் கிஷோர் என்று எண்ட்ரி கொடுத்தாரோ, அன்றே அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது, கிட்டத்தட்ட உறுதியானது.

இப்போது, தவெக., உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்கிற காட்சிகள், எடப்பாடி பழனிசாமி கண் முன் தெரிகிறது. நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கு வரவே வராது என சீமான், ஒருபுறம் சத்தியம் செய்து கொண்டிருக்கிறார். எனவே அந்த கதவு மூட வேண்டிய அவசிமில்லை, காரணம் அது திறக்கவே போவதில்லை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

எடப்பாடி பழனிசாமி முன் இருந்த சவால்கள்

இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜக தவிர்த்து வேறு எந்த கட்சியின் கூட்டணியும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. தவெக கதவை மூடவில்லை என்றாலும், திறந்து வைத்த கதவிலிருந்து காற்று வருமா என்கிற நிலை. ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகளுக்காக காத்திருந்து காலம் போனதும், மீண்டும் விஜய் கட்சிக்காக காத்திருந்து, இறுதி கட்டத்தில் யாரும் இல்லாமல் தனித்து நின்றால், 2026 அதிமுகவுக்கு சவாலுக்கு மேல் சவால் ஆகிவிடும்.

தவெகவுக்கு காத்திருக்கும் நேரத்தில், நாம் தமிழர் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்தால், பாஜக, நாம் தமிழர், பாமக, டிடிவி, ஓபிஎஸ், தமாக, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம் என ஒரு கூட்டணி அமைந்தால், அது அதிமுகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தலாம், எனவே தான் ஒரு கூட்டணியை அமைக்கும் அதே நேரத்தில், வேறு ஒரு கூட்டணி, அதிமுகவுக்கு எதிராக வந்து விடக்கூடாது என்பதால் ஒரு முடிவு எடுக்க வேண்டிய, அதுவும் உடனே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார்.

அரசியலில் எது முக்கியம்?

‘அன்று அப்படி சொன்னாரே? இன்று இப்படி சொல்கிறாரோ?’ என்றி வாதங்கள் பெரும்பாலும் அரசியல் களத்தில் வரும். அதில் தப்பாத அரசியல்வாதிகளே இங்கு கிடையாது. அரசியலில் வாக்கும், வாக்குறுதியும் என்றுமே நிலையில்லை. காரணம், வாக்குகளுக்காக தான் வாக்குறுதிகள் வருகிறது. அப்படியிருக்க, வாக்குக்காக வாக்குறுதிகள் மாற்றப்படும் என்பது கடந்த காலம் நமக்கு சொல்லிக் கொடுத்தது தான். அந்த வகையில் தான் ‘இனி பாஜக உடன் கூட்டணி இல்லை’ என்கிற வாக்குறுதியை முறியடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சொன்ன சொல்லை மாற்றி பேசலாமா? என்று நாம் கேட்கலாம். அது உண்மையும் கூட. ஆனால், அரசியலில் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை. கணக்குகள் தான் முக்கியம். ஒரு ஓட்டு தான், வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிக்கிறது. அதனால், தான் அரசியலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். ‘சொன்ன சொல் தவற மாட்டான்.. இந்த கோட்டைச் சாமி..’ என்று பழனிசாமி சொல்லிக் கொண்டிருந்தால், கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்கிற அவரின் முயற்சி நிறைவேறாது!

ஒத்து வந்த தேசிய ‘ஜனநாயக’ கூட்டணி

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணியை தவிர்த்த பிற கட்சிகள், அவரை பாஜக கூட்டணிக்கு தள்ளின என்பது தான், சரியானதாக இருக்கும். அப்படி பார்க்கும் போது, பாஜக கூட்டணியில் சேர்ந்ததற்காக எடப்பாடி பழனிசாமி மீது வரும் விமர்சனங்களில் சரி பாதி, அவரின் கூட்டணி அழைப்பை நிராகரித்த கட்சிகளுக்கும் சேரும். ஒருவேளை அவர் நினைத்த கூட்டணி அமைந்திருந்தால், அவர் பாஜகவை டிக் செய்திருக்கப் போவதில்லை. அதிமுக என்கிற கட்சிக்கு குறைந்தது 20 சதவீதம் ஓட்டு இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் 18 சதவீதம் வாக்குகளை வாங்கிய பாஜக கூட்டணியை, தன் வசமாக்கும் போது, அதன் ஓட்டு சதவீதம், 40+ என்று ஆகலாம். இது தான், எடப்பாடி பழனிசாமி முன், மூத்த நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கை. இனி ‘ஜனநாயகனுக்கு’ காத்திருப்பதை விட, தேசிய ‘ஜனநாயக’ கூட்டணிக் போகலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் வருமா? ஆம், வரும். சரி, அவர் வைக்கவில்லை என்றால்? தினமும் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து துதிபாடுவார்களா? அதற்கு கூட்டணி வைத்தே விமர்சனத்தை சந்திக்கலாம் என்று துணிந்து முடிவு எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தலில் கணக்குகள் தான் முக்கியம், இந்த கணக்கு சரியாகுமா? தவறாகுமா? என்பது பின்னால் பார்க்க வேண்டியது. இப்போதைக்கு, ரேஸில் இருக்கிறோம் என்பதை பிரகடனம் செய்திருக்கிறார் இபிஎஸ். இதுவரை திமுக-அதிமுக-பாஜக-தவெக, நதக என்று 5 ஆக இருந்த களத்தை, 4 ஆக மாற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. வரும் நாளில், அது என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது!

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.