‘2000.. 5000.. 10000.. இல்ல பூஜ்ஜியமா? இப்போ அரசியலா அவியலா?’ ஆர்.பி.உதயக்குமார் காட்டம்!
‘எடப்பாடி பழனிசாமி அரசு 2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ,அப்போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்றைக்கு அவியல் செய்கிறாரா? அரசியல் செய்கிறாரா?’
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எல்லோரும் நோக்கி இருக்கின்ற இந்த வேளையிலே, 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வழங்குவதாக தமிழக அரசுக்கு அறிவித்திருக்கிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ஒரு இனிய தொகுப்பாக, மகிழ்வான தொகுப்பாக உருவாக்கியவர் அம்மா, முதன் முதலாக 100 ரூபாய் பொங்கல் பரிசுதொகை வழங்கிய போது,லட்சுமியின் அடையாளமாக எல்லார் இல்லங்களிலும், உள்ளவர்களிலும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நாங்கள் என்னவெல்லாம் செய்தோம்
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அரிசி,சர்க்கரை, கரும்பு, கிஸ்மஸ், முந்திரி, ஏலக்காய்,வேட்டி, சேலை என பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கினார்கள். இதனை தொடர்ந்து கொரோனா காலங்களில் மக்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு,மற்றும் பொங்கல் தொகப்போடு 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கி இதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும், மகிழ்ச்சியை பெற செய்தார்
இந்த இயற்கைக்கும்,கடவுளுக்கும், நமக்கு உதவியாக இருக்கிற கால்நடைகளுக்கும் இந்த பொங்கல் வெகு விமர்சையாக தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது, ஆகவே இந்த பொங்கல் திருநாளில் அவர்களுடைய கரங்களிலே அம்மா அரசின் சார்பிலே வழங்குகிற அந்த பரிசு தொகுப்பு இருந்தது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு திட்டங்களிலும் புரட்சி செய்தார், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி உருவாக்கி புரட்சி, 7.5 சகவீத இட ஒதுக்கீடு கொண்டுவந்து புரட்சி, குடிமராமத் திட்டம் கொண்டு வந்து புரட்சி,2000 அம்மா மினி கிளினிக் உருவாக்கி புரட்சி, சாலை மேம்பாட்டில் புரட்சி பொங்கல் பண்டிகை முன்னிட்டு 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு 2500 ரூபாய் வழங்கி வரலாற்று புரட்சி.
பொங்கல் தொகுப்பு.. மக்களிடம் ஆர்வமில்லை
2500 ரூபாயை எடப்பாடி ஆட்சியில் கொடுத்தபோது அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டும் என்று வாய் கிழிய சவால் விட்டார். அன்றைக்கு சவுடாலாக பேசிய ஸ்டாலின் இன்றைக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கக்கூட மனமில்லை.
இன்றைக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசில் மக்களிடத்தில் வரவேற்பு இல்லை மகிழ்ச்சி இல்லை. வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குகிற பணிகளில் மேற்கொண்டு இருந்தாலும் அதை மக்கள் இன்றைக்கு வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
இந்த அரிசி தொகுப்பு என்பது அதன் தரம் எப்படி இருக்கும் என்பதும் கடந்த காலத்திலே பொங்கல் பரிசில் எப்படி இருந்தது என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி அரசு 2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ,அப்போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்றைக்கு அவியல் செய்கிறாரா? அரசியல் செய்கிறாரா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
இன்றைக்கு பருவமழை காலத்தில் விவசாயிகள், மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் கூட பொங்கல் பரிசு நீங்கள் வழங்கவில்லை. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பொதுவிநியோக திட்டத்தில் கொடுத்தீர்கள். குடும்ப அட்டை இல்லாத தகுதியானவர்களுக்கு விண்ணப்பத்தை 15 நாட்களில் புதிய அட்டைகள் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும், அதேபோல குடும்ப அட்டைகளுக்கு மாதம் மாதம் வழங்கப்படும், 20 கிலோ அரிசி தரமாக வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு தரமில்லாமல் வழங்குவதை மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பல துறைகளில் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் அனைத்தும் ஒரே துறையில் கொண்டுவரப்படும், நியாய விலை கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரை அளவு உயர்த்தப்பட்டு மாதம் ஒரு கிலோ கூடுதலாக சக்கரை வழங்கப்படும் என்று சொன்னீர்கள் தற்போது வழங்கப்படுகிறதா?
என்ன தான் கொடுப்பீர்கள்?
அதேபோல பொங்கலுக்கு வழங்கப்படும் வேஷ்டி,சேலை கூட தாமதமாக வழங்கப்படுகிறது, முறையாக வழங்கப்படவில்லை இந்த ஆண்டு கூட தரமாக வழங்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்தாண்டு ஆயிரம் வழங்கப்பட்டது, ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் கூட இந்த ஆண்டு வழங்கப்படுமா என்று அறிவிப்பு வெளியாகவில்லை ஆகவே இந்த ஆண்டு கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்களா? என்பது மக்கள் கேள்வியாக உள்ளது. கடந்தாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படவில்லை .எடப்பாடியார் அறிவிப்பு கொடுத்த பின்பு தான் கரும்பு அதில் சேர்க்கப்பட்டது.
திட்டங்களை அறிவித்தும் அந்த திட்டங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராடும் போது பிறகு அடிபணிந்து திரும்பப் பெறுவதுமாக திமுக ஆட்சியில் உள்ளது. கல்யாண மண்டபங்களில், விளையாட்டு மைதானங்களில் டாஸ்மாக்கை திறக்க உத்தரவு இட்டபோது, மக்கள் கொதித்தெழுந்தபோது பின்பு அதை வாபஸ் பெற்றார்கள்.
அதனைத் தொடர்ந்து 8மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம்,8 மணி நேரம் ஓய்வு என்ற நூறாண்டு கால போராட்டத்தில் கிடைத்த அந்த தொழிலாளர் உரிமை பறிக்கின்ற வகையில் சட்டசபையில் தாக்கல் செய்த போது, ஒட்டுமொத்த மக்கள் எதிர்த்து போராடுவதற்கு பிறகு அதை வாபஸ் என்று இப்படி தான் உங்களுடைய இந்த நான்காண்டு கால ஆட்சி உள்ளது.
வடகிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆண்டு பொங்கலில் 2000 ரூபாய் வழங்குவீர்களா? ஐயாயிரம் ரூபாய் வழங்குவீர்களா? அல்லது 10,000 ரூபாய் வழங்குவீர்களா? அல்லது வழக்கம் போல மக்களுக்கு பூஜ்யத்தை கொடுப்பீர்களா,’’ என்று ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பினார்.