Tamilnadu Assembly 2025: பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கிய சட்டப்பேரவை.. நேரலையில் காட்டப்படாத அதிமுக எம்எல்ஏக்கள்!
Tamilnadu Assembly 2025: தமிழக சட்டப்பேரவையின் நான்காம் நாள் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கி இருக்கிறது. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டம் தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து யார் அந்த சார் என்ற பேட்ஜீடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், கேள்வி - பதில் நேரம் நடைபெற்ற போது, உறுப்பினர்களின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசினார். இதற்கிடையில், அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியபோது நேரலையில் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கருப்புச் சட்டையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரலையில் காட்டப்படவில்லை. அமைச்சர்கள் பேசும்போது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பும்போது ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவர் பேசிய குரல் மட்டும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக கேள்வி நேரம் முழுமையாக நேரலை செய்யப்படும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் பேசும் காட்சிகள் மட்டும் காட்டப்படாதாது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவையில், நான் பேசுவதை ஒளிபரப்பு செய்வதில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.
3-ஆம் நாள் கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின், 3ஆம் நாளான நேற்றும் (ஜன.08) அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். மேலும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
நேரலையும்.. விமர்சனமும்
முன்னதாக, முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்த விவகாரம் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது மட்டுமே நேரலை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத ஒரு நடைமுறையாக இருந்ததால் அனைத்து தரப்பினரும் விமர்சனம் எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், இன்று நடந்த கேள்வி பதில் நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் எழுப்பும் கேள்விகள் மட்டும் நேரலை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.
டாபிக்ஸ்