மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் நா.பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பங்கள் ஜூன் 2ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 1 இணைந்த கல்லூரி மூலம் 5 மீன்வளம் சார்ந்த 4 ஆண்டு பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழிற்சாா் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி, மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகையில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என இரண்டு பிரிவுகளில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தின் சென்னை-வாணியன்சாவடி ஓஎம்ஆா் வளாகத்தில் உள்ள மீன்வள உயிா் தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிா் தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவுதொழில்நுட்பவியல்) வழங்கப்படுகிறது.