Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?
எனது பயணம் மூலம் பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் புதிய மாற்றத்திற்கான பயணத்தை உருவாக்கும் போது நன்மை கிடக்கும்.
’எனது எதிர்கால திட்டம் குறித்து பத்திரிகை நண்பர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து விசிக கட்சித் தலைமை சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா நேற்று அறிவித்தார்.
இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:- ஆதவ் அர்ஜூனா ஒரு கட்சியின் தலைமையின் கீழ் கட்டுப்பாட்டு செயல்பட வேண்டும் என திருமாவளவன் கூறி உள்ளாரே?
பதில்:- தலைவரின் வார்த்தைகளுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன், அவரது வார்த்தைகளுக்கும், அன்புக்கும், அவரது ஆலோசனைக்கும் கட்டுப்பட்டு அவரோடு நான் பயணிப்பேன். திருமா அண்ணனின் விமர்சனம் ஒரு அட்வஸ், அவர் எனக்கு என்றும் ஆசான்தான். கொள்கை சார்ந்த அரசியலில் எனது பயணம்.
கேள்வி:- தென் மாவட்டங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு, வட மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் பிச்சைபோடுவதாக வேல்முருகன் எம்.எல்.ஏ குற்றம் சாட்டி உள்ளாரே?
பதில்:- இன்னும் கொஞ்சம் நாளில் அவரையும் சங்கி என்று சொல்லிவிடுவார்கள். வேல்முருகன் அவர்களின் கருத்துக்கள் உடன் நான் உடன்படுகிறேன். எதிர்காலத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்ற அடிப்படையில் கொள்கையை உருவாக்க வேண்டும். இதை சொன்னதால்தான் எனக்கு தண்டனை கிடைத்து.
கேள்வி:- நீங்கள் தவெக கட்சியின் இணைய போவதாக கூறப்படுகிறதே?
பதில்:- இல்லை, எந்த இணைப்பு என்பதை விட எதை செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன். 2 வருடம் என்னுடன் பயணித்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களுக்கு நன்றி. எதிர்கால திட்டம் குறித்து பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன்.
கேள்வி:- உங்களுக்கு பாஜக உடன் தொடர்பு உள்ளதாக விமர்சனம் உள்ளதே?
பதில்:- சாம்சங் தொழிலாளர்கள் உடன் போராடினால் நக்சல், மழை வெள்ளத்தில் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று சொன்னால் சங்கி என்று சொல்வார்கள். என் மீதான சந்தேகங்களுக்கு, என் அரசியல் பயணத்தில் பதில் சொல்லுவேன். எனது பயணம் மூலம் பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் புதிய மாற்றத்திற்கான பயணத்தை உருவாக்கும் போது நன்மை கிடக்கும்.