TVK: த.வெ.கவில் இணைந்த பின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!
TVK: த.வெ.கவில் இணைந்தபின்னும் ஆதவ் அர்ஜூனாவின் பாசம்.. விசிக தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

TVK:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி 31ஆம் தேதியான இன்று காலை சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடிகர் விஜய்யுடன் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தபின், மரியாதை நிமித்தமாக திருமாவளவனுடன் சந்தித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் என்னும் பதவியில் இருந்து, தற்காலிகமாக ஆறுமாதத்துக்கு நீக்கப்பட்டார், ஆதவ் அர்ஜூனா.
ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து நீக்கப்பட காரணம் என்ன?
சென்னையில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ’’5 வயதில் என்னுடைய தாயின் தற்கொலையை நான் பார்த்தவன். என் தாயின் அக்காவாக, என் பெரியம்மாவாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். அம்மாவும், என் பெரியம்மாவும் 11 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்தபோது, சக தோழியாக வாழ்ந்தார்கள்.
என் தாயின் இறப்பு, தனிமை என்னை நூலகங்களை நோக்கி இழுத்துச் சென்றது. சின்ன வயதில், மாவேயிஸ்ட் ஆக வேண்டும், நக்சலைட் ஆகணும் என்று நினைத்தேன். அப்போது, என் பேராசிரியர்கள் எனக்கு அறிவுரை வழங்கினர். ‘இந்த சிஸ்டத்தை மாற்ற வேண்டுமென்றால், இந்த சிஸ்டத்தை நீ பழக வேண்டும்’ என்று கூறினர். அன்றிலிருந்து, இரு ஆராய்ச்சியை மேற்கொண்டேன். ஒன்று பெரியாரின் கொள்கை, மற்றொன்று புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை.
மேடையில் திருமா இல்லை, அவருடைய மனசாட்சி இங்கு தான் இருக்கும் என்று எனக்கு தெரியும். காலச்சூழ்நிலை தலித் விலங்கை உடைக்கும்.
2026 தேர்தலுக்கான பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் பரம்பரையை ஒழிக்க, அம்பேத்கரின் சிந்தனை தேவைப்படுகிறது. திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர் அவர்களை, தலித் அல்லாத விஜய் அவர்கள் வெளியிடுவது என்பது தான், புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. திருமாவின் கனவு. அந்த கனவு ஈடேறியிருக்கிறது. விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கை தெரியுமா என்று விஜய் மீது விமர்சனம் செய்கிறார்கள்.
கொள்கை பேசியவர்கள் ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை? முதல்முறையாக அம்பேத்கரின் நினைவு நாளில், எல்லா அமைச்சர்களும் அம்பேத்கரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் அரசியலை, எங்கிருந்து கற்று வந்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். 2026 தேர்தலுக்கான பணிகள், மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.
பிரசாந்த் கிஷோர் என்னிடம் இதைத்தான் சொன்னார் - ஆதவ் அர்ஜூனா:
பிறப்பால் அனைவரும் சமம் என்கிற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக் கூடாது. ஒரு கருத்தியல் தலைவர் தான் தமிழகத்தை ஆள வேண்டும். 2014ல் ஏன் பாஜக வெற்றி பெற்றது? பிரசாந்த் கிஷோர் என்னிடம் சொன்னார், குடும்ப ஆட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ததால் தான், இன்று வரை பாஜக வலுவாக உள்ளது என்று.
தமிழ்நாட்டில் ஏன் அதை பேச மறுக்கிறோம்? விஜய் மட்டும் தான், கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் குரல் கொடுத்தவர். எல்லாரும் சமம் என்பது தான் திராவிடம். தமிழ்த்தேசியம் என்றாலும் எல்லாரும் சமம் தான். பிரபாகரனும் அதைத் தான் சொல்கிறார்.
இங்கு சாதியின் அடிப்படையில் உருவாக்கக் கூடிய தேர்தல் அரசியல் தான் பிரச்னை. திருமா உடன் தேர்தல் பிரசாரத்திற்கு போகும் போது, அவரை தலித் பகுதிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்கின்றனர்.
மன்னர் ஆட்சியை கேள்வி கேட்டால், உடனே சங்கி, நக்சல் என்று கூறிவிடுவார்கள். நீ என்னவேண்டுமானாலும் சொல்லு, கவலை இல்லை. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு செய்துவிட்டார்கள்.’’ என்று அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
இந்தப் பேச்சு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினை நிலைகுலையச் செய்தது. இந்நிலையில் தான், விசிகவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, ஆதவ் அர்ஜூனா 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின், அக்கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, ஜனவரி 31ஆம் தேதி விஜயை சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம்பெற்றார். த.வெ.கவில் இணைந்தபின்னும், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து இருக்கிறார், ஆதவ் அர்ஜூனா.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்