ECR Incident: நெஞ்சை பதற வைக்கும் ECR சம்பவம்.. பெண்களை துரத்தியது யார்?.. கூடுதல் தனிப்படைகள் அமைத்து தேடும் போலீஸ்!
ECR Incident: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ECR Incident: கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் இருந்த நபர்கள் துரத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை துரத்தும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறைக்கு சவால்?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் கார் உரிமையாளரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார் பலரிடம் கை மாறியதால் அதில் வந்த இளைஞர்கள் யார் என்பதை கண்டறிவது போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது.
கூடுதல் தனிப்படைகள் அமைப்பு
பெண்களை காரில் துரத்திய விவகாரம் தொடர்பாக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைத்து இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரின் பதிவெண்ணை வைத்து தேடியதில் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
