நீதிக்கேட்டு பாஜக நடத்திய பேரணி! குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை தட்டித் தூக்கிய போலீஸ்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணியினர் பேரணி செல்ல முயன்றனர்.
தடையை மீறி பேரணி நடத்த முயன்றதாக குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணியினர் பேரணி செல்ல முயன்றனர். இதற்கு காவல்துறை தடை விதித்த நிலையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் - குஷ்பு ஆவேசம்
இந்த ஆர்பாட்டத்தில் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் வன்கொடுமை நடைபெறாதது என அரசு சொல்லும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இது கண்ணகி மீது சத்தியம், தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிக்கு சமம். இது ஆரம்பம்தான் இது சென்றுக் கொண்டே இருக்கும். இனி நாங்கள் சும்மா இருக்க போவதில்லை. எங்களை கைது செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் தெருவுக்கு வருவோம். நீதி கிடைக்கும் வரை போராடுவோம். அதை நீங்கள் கேட்டுதான் ஆக வேண்டும் என பேசினார்.
அண்ணாமலை கண்டனம்
மதுரையில் போராடிய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழ்நாடு பாஜக மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி திருமதி உமாரதி ராஜன், அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சரஸ்வதி அவர்கள், பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் திருமதி குஷ்பு சுந்தர் அவர்கள் மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.