TVK: விஜய் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜுனா, சிடி.நிர்மல் குமார்! காளியம்மாளின் நிலை என்ன?
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிடி.நிர்மல்குமார் ஆகியோர் இணைய உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜூனா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. விசிக தலைவர் திருமாவளவன் - தவெக தலைவர் விஜய் ஆகியோரை கொண்டு அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்காத நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து விலகினார்.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆதவ் அர்ஜூனா ஆலோசனை நடத்திய நிலையில், இன்றைய தினம் தவெகவில் இணைவதற்காக பனையூருக்கு வந்து உள்ளார். அவருக்கு தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறியதல், தவெகவுக்கு சாதகம் மற்றும் பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.