TVK Vijay: ’எனது தேர்தலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள்’ தவெக தலைவர் விஜய் பரபரப்பு வீடியோ!
”Tamizhaga Vetri Kazhagam Membership: வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய எனது பயணத்தில் மக்கள் பணி செய்யுங்கள் என நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்”
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதாக அறிவித்து இருந்தார்.
அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘“விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர, ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
மாற்றத்திற்காக மக்கள் ஏங்குகின்றனர்
தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற ("பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்") பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும் என விஜய் கூறி இருந்தார்.
2 கோடி பேரை சேர்க்க இலக்கு
இதனை தொடர்ந்து தவெக கட்சிக்கு மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்ப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த ஆலோசனைக்கூட்டம் ஒன்றில் பேசிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கூறி இருந்தார்.
முதல் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட விஜய்
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கி உள்ளார். தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியில் தனது புகைப்படம், பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட விஜய் அக்கட்சியின் முதல் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவக் கொள்கையை பாலோ பண்ணி, வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கிய எனது பயணத்தில் மக்கள் பணி செய்யுங்கள். எங்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட உறுதி மொழியை படியுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் இணையுங்கள் என நடிகர் விஜய் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.