’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்

’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்

Kathiravan V HT Tamil
Published May 11, 2025 03:07 PM IST

“எடப்பாடி, சின்னம்மாவை பயன்படுத்தி முதலமைச்சரானவர், பின்னர் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தார். அவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்திற்குள் அடைக்க முயன்றார்”

’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்
’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்

திமுகவின் சாதனைகள்

சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். “110 பக்க சாதனை புத்தகத்தில், பெண்களுக்கான திட்டங்கள், காலை உணவு திட்டம், 10,000 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இவை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை,” என்று பாராட்டினார். குறிப்பாக, காலை உணவு திட்டத்தை பசியின் அருமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.

திராவிட சித்தாந்தத்திற்கு ஆதரவு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சித்தாந்தங்களை ஆதரித்த கருணாஸ், 2024 பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்காக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ததாகக் கூறினார். “திமுகவின் 75-வது ஆண்டு பவளவிழாவில் முக்குலத்தோர் புலிப்படை தோழமைக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது பெருமை,” என்றார். தனது இயற்பெயர் கருணாநிதி என்பதையும், தனது குடும்பத்தின் திமுக பின்னணியையும் அவர் நினைவுகூர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம்:

கருணாஸ், எடப்பாடி கே. பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “எடப்பாடி, சின்னம்மாவை பயன்படுத்தி முதலமைச்சரானவர், பின்னர் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தார். அவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்திற்குள் அடைக்க முயன்றார்,” என்று குற்றம்சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினின் தலைமையில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த சமுதாயத்திற்கு துணை நிற்பார் என்று கூறினார்.

முக்குலத்தோர் சமுதாயத்தின் அடையாளம்

முக்குலத்தோர் சமுதாயத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ குலங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட கருணாஸ், “ஜாதி ஒரு அடையாளம், ஆனால் உணர்வு நம்மை உயர்த்தும். வெறி நம்மை வீழ்த்தும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை,” என்று வலியுறுத்தினார். ஸ்டாலினின் ஆட்சி ஜாதி, மத, மொழி கடந்து அனைவருக்குமான ஆட்சியாக உள்ளதாக பாராட்டினார்.

பேரணியால் போர் நிறுத்தம்

கருணாஸ், ஸ்டாலினின் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து 5 கிலோமீட்டர் பேரணியை நடத்தினார். இந்த பேரணி முடிவதற்கு முன்பே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டார்கள். தளபதி உடைய சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கருணாஸ் குறிப்பிட்டார். “இந்தியாவில் எந்த மாநிலமும் இப்படியொரு முன்னெடுப்பை செய்யவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா எந்த மாநிலமும் இதை செய்யவில்லை. உலகத்திற்கே முன்னோடியாக திகழும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நிரந்தர முதலமைச்சராக இருப்பார்,” என்று கருணாஸ் உறுதியாகக் கூறினார்.