Thirumangalam: பட்டப்பகலில் பயங்கரம்-பேரையூரில் வீடு புகுந்து வாலிபர் படுகொலை!
அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாகத்தியால் வீட்டில் படுத்து இருந்த அழகரை சரமாரியாக தலையில் வெட்டியதில் அழகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
திருமங்கலம் அருகே பேரையூரில் பட்டப் பகலில் வீடு புகுந்து வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பி ஓடிய அடையாளம் தெரியாத நபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த பேரையூர் கீழத்தெரு பிச்சைக்காளி மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சங்கர் அழகர் என இரு மகன்கள் உள்ளனர் . வீட்டில் உள்ள அனைவருமே கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் பிச்சை காளியின் இளைய மகன் அழகர்(21). கட்டிட வேலை பார்க்கும் அழகர் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் தந்தை பிச்சை காளி அழகரை வேலைக்கு அழைத்துள்ளார். அதற்கு அழகர் நாளை வருவதாக தெரிவித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார் மூத்த மகன் சங்கரும் வீட்டில் இருந்துள்ளார். பெற்றோர் இருவர் மட்டும் வேலைக்கு சென்றுள்ளனர். சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் வீட்டு கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு கதவைத் திறந்த சங்கர் மர்ம நபர்கள் கையில் கத்தியுடன் இருப்பதைக் கண்டு அலறி எடுத்து வெளியே ஓட்டம் பிடித்தார். இதையடுத்து வெளியே வந்த சங்கர் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது தாய் மாரியம்மாளை அழைத்து வர சென்று விட்டார்.
அதற்குள் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாகத்தியால் வீட்டில் படுத்து இருந்த அழகரை சரமாரியாக தலையில் வெட்டியதில் அழகர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் நால்வரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாய் மாரியம்மாள் மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறி அழுதார். இது குறித்து பேரையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் பொன்னி வீட்டுக்குள் இருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு அங்கேயே நின்று விட்டது. இந்நிலையில் போலீசார் இறந்த அழகரின் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி சிவபிரசாந்த் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்குதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.