“பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
ஸ்டாலின் நான்கு நாட்கள் தவித்து வருகிறார். தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடக்கின்றது. இழந்த நகைகளை தருகிறோம் அஜித்குமாரை உயிரோடு தரமுடியுமா?

’’பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” என திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இளைஞர் அஜித்குமார் போலீஸாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, அதிமுக மற்றும் பாஜகவினர் இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, சிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன். பாஜக எச். ராஜா, மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர், நகைத் திருட்டுப் புகாரில் தனிப்படைப் போலீஸாரால் விசாரிக்கப்படும்போது, கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.