Jaffer Sadiq: தலைமறைவாக உள்ள போதை கடத்தல் ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோடீஸ்!
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றிய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்கு சீல் வைத்து சென்றனர்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய வழக்கில் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு காவல்துறை தேடி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) மற்றும் டெல்லி காவல்துறையின் கூட்டுக் குழு மூன்று நபர்களை கைது செய்ட்னனர். இவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு அனுப்பப்பட்ட 50 கிலோ போதைப்பொருள் தயாரிக்கும் ரசாயனத்தை கலப்பு உணவுத் தூள் மற்றும் உலர்ந்த தேங்காயில் மறைத்து கடத்தி இருந்தனர்.
இதன் மூலம் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் உடைத்துள்ளது.
இது தொடர்பாக என்சிபி துணை இயக்குநர் ஜெனரல் (டி.டி.ஜி) ஞானேஷ்வர் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 45 சூடோபீட்ரின் ஏற்றுமதிகளை அனுப்பியதாக போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்ததாக தெரிவித்தார். இந்த ஏற்றுமதிகள் சுமார் 3,500 கிலோ சூடோபிட்ரின் ஆகும், இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ .2,000 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் என்சிபி மற்றும் டெல்லி போலீஸ் குழுக்கள் நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக ஞானேஷ்வர் சிங் கூறி இருந்தார்.
மேலும் இந்த போதை பொருள் கடத்தல் கூட்டணியின் சூத்திரதாரி ஒரு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தலைமறைவாக உள்ளார். சூடோபீட்ரின் மூலத்தை கண்டறிய அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று ஞானேஸ்வர் சிங் கூறி இருந்தார்.
இதனை அடுத்து திமுகவின் அயலக அணியின் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் அப்பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
ஜாபர் சாதிக் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள அருளானந்தம் தெருவில் உள்ள அவரது வீட்டில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஜாபர் சாதிக் ஆஜர் ஆக வேண்டிய நிலையில், இதுவரை ஆஜராகமல் தலைமறைவாக உள்ளார். இதனால் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றிய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்கு சீல் வைத்து சென்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம், மைதீன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
