Storm warning: 'புயல் சின்னம் எதிரொலி! 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர கடிதம்! விவரம் தெரியுமா?’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Storm Warning: 'புயல் சின்னம் எதிரொலி! 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர கடிதம்! விவரம் தெரியுமா?’

Storm warning: 'புயல் சின்னம் எதிரொலி! 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர கடிதம்! விவரம் தெரியுமா?’

Kathiravan V HT Tamil
Nov 30, 2023 10:11 AM IST

”நாளை மறுநாள் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.”

பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்
பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் மாதம் 2ஆம் தேதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இதன் காரணமாக 14 கடலோர மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களை சேர்ந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். திருவள்ளூர்,சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் வரும் 2ஆம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மேற்கண்ட மாவட்டங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் வலுப்படுத்தி வைத்தல், மழை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள், மக்கள் தங்கும் முகாம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரையும் உடனடியாக கரை திரும்பியதை உறுதி செய்யவும், பழைய கட்டடங்களை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும் இக்கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.