DMK vs Seeman: 'திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா?' திமுகவை விட்டு விளாசிய சீமான்!
"இராமர் எங்களின் முன்னோடி" என்ற பாஜகவின் வர்ணாசிரம குரலை அப்படியே திமுகவும் ஒலிக்கத்தொடங்கியுள்ளதன் மூலம் பாஜகவின் உண்மையான பி டீம் என்பதை ஏற்கிறதா திமுக?”

தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது இராமரின் மாடலா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் திருவாய் மலர்ந்திருப்பது வியப்பை அளிக்கிறது.
பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்
இத்தனை காலமும் திராவிட ஆட்சி என்பது பெரியார் ஐயா ஈ.வே.ராமசாமி அவர்களின் வழிவந்தவர்கள் நடத்தும் ஆட்சி என அனைவரும் நம்பிக்கொண்டிருக்க, இல்லை 'நாங்கள் பகுத்தறிவு பகலவன் ராமசாமி வழிவந்தவர்கள் அல்ல; பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள்' என்று திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப்பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்றுகொள்கிறது என்பதும் உறுதியாகிறது.