Thoothukudi floods: ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது!
“கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் உதவி உடன் ரயிலில் இருந்த கர்ப்பிணி அனுசுயா மற்றும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டு மதுரைக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்”
பெருமழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் நிலையத்தில் சிக்கி ராணுவம் மூலம் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. டகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை பதிவான மழையின் அளவு 44 செமீ, இந்த கால கட்டத்தின் சராசரி மழை அளவு 42 செ.மீ., இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 சதவீதமும், நெல்லை 135 சதவீதமும், தூத்துக்குடி 68 சதவீதமும், தென்காசி 80 சதவீதமும் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பெருமழை வெள்ளம் காரணமாக தண்டவாளம் அடித்து செல்லப்பட்டதால், கடந்த டிச.17ஆம் தேதி அன்று திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி கிளம்பிய செந்தூர் விரைவு ரயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ரயில் நிலையத்தில் இருந்து மீதம் உள்ள பயணிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் உதவி உடன் ரயிலில் இருந்த கர்ப்பிணி அனுசுயா மற்றும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டு மதுரைக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில், கர்ப்பிணி பெண் அனுசுயாவுக்கு குழந்தை பிறந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.