Leopard Attack : பெரும் துயரம்.. தாய் கண்முன்னே சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்.. சிறுத்தை தாக்கி பலியான சோகம்!
நீலகிரியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளால் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நீலகிரியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது.
பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. காயமடைந்த மூன்று பெண்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதே பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தி மக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது. அதோடு 6 இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் பந்தலூர் அருகில் உள்ள மேங்கோரேஜ் தேயிலைத் தோட்டத்தில் பயணியாற்றும் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், தனது 3 வயது மகளை அங்கன்வாடியிலிருந்து நேற்று மாலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிறுமி மீது பாய்ந்து இழுத்துச் சென்றுள்ளது.
இதைக் கண்டு பதறிய அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுத்தையை விரட்டியுள்ளனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், மேங்கோரேஞ்ச் பிரிவு ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து மனிதர்களைத் தாக்கி வந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்