திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நடந்த கோர தீ விபத்து - குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நடந்த கோர தீ விபத்து - குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு ஆகிய துயரச்செய்தி கிட்டியுள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் எலும்பியல் மருத்துவமனையில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் குழந்தை மற்றும் மகளிர் உட்பட 7 பேர் உயிரிழந்ததாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் காவல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த மருத்துவமனையானது திண்டுக்கல் முதல் திருச்சி செல்லும் சாலையில் இருக்கிறது. ஆனால், இது திண்டுக்கல் மாநகர எல்லைக்குள்ளேயே இருக்கிறது.
இந்த தீ விபத்தின்போது பாதிக்கப்பட்ட 7 பேரும் ஒரு லிஃப்டில் மயக்கமடைந்து காணப்பட்டனர். அவர்களை உடனடியாக மீட்ட தீயணைப்புத்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால், அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கருத்து தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் மூச்சுத்திணறல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தின்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பணியாளர்கள் சுமார் 30 நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிய பின்னர் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்துள்ளனர்.
இரவோடு இரவாக குவிந்த ஆம்புலன்ஸ்கள்:
இரவோடு இரவாக தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்றது.
பின்னர் மீட்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சில நோயாளிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என்.பூங்கொடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் என்ன?:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வந்ததும், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாநகர காவல்துறையினர் விபத்துக்கு வேறு எதுவும் காரணங்கள் இருக்கின்றதா எனவும் ஆய்வுசெய்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உரிய உடற்கூராய்வுக்குப் பின், அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன. விபத்தின்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டை உலுக்கிய விபத்துகள்:
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி நகரில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையின் பரிந்துரைகளை மருத்துவமனை அதிகாரிகள் நிவர்த்தி செய்திருந்தால், மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (என்.ஐ.சி.யு) ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தைத் தடுத்திருக்க முடியும் என விமர்சனங்கள் எழுகின்றன.
ஜூன் 20, 2024 தேதியிட்ட பாதுகாப்பு தணிக்கை அறிக்கை, இந்த ஆண்டு ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஜான்சியில் மின்சார பாதுகாப்பு உதவி இயக்குநர் சந்திர பூஷண் சவுபே மற்றும் ஜான்சியில் மின்சார பாதுகாப்பு அதிகாரி முலாயம் சிங் யாதவ் ஆகிய இரண்டு பேர் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைந்தது.
நிர்வாக கட்டடம், ஆடிட்டோரியம், உடற்கூறியல் மற்றும் நோயியல் பகுதிகள் உட்பட பல துறைகள் மற்றும் பிரிவுகளில் கடுமையான பாதுகாப்பு கவலைகளை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பல வயரிங் இணைப்புகள் வெளிப்பட்டதையும், ஜங்ஷன் பாக்ஸ்கள் திறந்துவிடப்பட்டதையும் அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இது தீ விபத்து அபாயத்தை கணிசமாக அதிகரித்தது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது .
டாபிக்ஸ்