Thugs Arrested: அம்பானி இல்லத் திருமணத்தில் கொள்ளை - டெல்லியில் கைதான திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் - பின்னணி?
Thugs Arrested: ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Thugs Arrested: ஆனந்த் அம்பானி திருமண முன் நிகழ்ச்சியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருச்சியைச் சார்ந்த ஐந்துபேரை டெல்லி போலீசார் கைதுசெய்துள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமங்களின் உரிமையாளரான நாட்டின் முக்கிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய விழா, குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடந்தது.
அப்போது ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுக்கு வந்த நபர்களின் வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தபோது, சரியாக ஸ்கெட்ச் போட்டு, அவர்களின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் போன்ற முக்கியப் பொருட்களை திருச்சியின் ராம்ஜி நகரைச் சார்ந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.
இந்த திருட்டு தொடர்பாக விசாரித்த காவல்துறையினர், 5 பேரை டெல்லியில் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி ராம்ஜி நகரைச் சார்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
போடப்பட்ட ஸ்கெட்ச்:
ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற இக்கும்பல், அங்கு கடும்பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்ததால், ஜாம்நகர் செல்லமுடியாமல் தவித்துள்ளனர்.
அதன்பின் அங்கிருந்து கிளம்பிய அந்த கும்பல், ராஜ்கோட்டில் மெர்சிடிஸ் காரை உடைத்து லேப்டாப்பை திருடியுள்ளது. அதன்பின், ராஜ்கோட்டை அடுத்த மால்வியா பகுதியில் ஒரு இடத்திலும், ஜாம் நகரில் இரண்டு இடங்களிலும், அகமதாபாத்தின் வஸ்த்ராபூரிலும் காரின் கண்ணாடியை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின், இந்த கும்பல் டெல்லி தப்பிச்சென்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.10 லட்சம் பணம், மொபைல், ஹார் டிஸ்குகள், டிராலி பேக் எனப் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டின் திருச்சி ராம்ஜ்நகரைச் சார்ந்த ஜெகன் பாலசுப்பிரமணியம் அகமுடையார், தீபக் பார்த்திபன் அகமுடையார், குணசேகர் உமாநாத், வீரபத்ரன் முதலியார், அகரம் கண்ணன் முத்தரையர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களின் தலைவனான வி.ஜி.சுகுமாறன் என்ற மதுசூதனன் தலைமறைவாக இருக்கிறார். அதனால், அவரையும் பிடிக்க தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களின் கொள்ளை நுணுக்கங்கள்:
இதுதொடர்பாக, கிரைம் பத்திரிகையாளர் ராம்ஜி அறம்நாடு யூட்யூப் தளத்துக்கு அளித்த பேட்டியில், ‘’திருச்சி ராம்ஜி நகரில் இருக்கும் கொள்ளையர்கள் காந்தியவாதிகள் மாதிரி. சமயம் பார்த்து காத்திட்டு இருந்திருப்பாங்க. நாம் கண் அசரும் நேரத்தில் நம் பொருட்களை கை மாற்றுவார்கள். இதில் ஒருத்தராக ஈடுபட மாட்டார்கள். பெரிய குழுவாக ஈடுபடுவார்கள்.
மேலும், கண் அசரும் நேரத்தில் ஒருவரின் சூட்கேஸை, ராம்ஜி நகர் கொள்ளையர்கள் காலால், இன்னொரு நபருக்குத் தள்ளுவார். அதனை பக்கவாட்டில் இருப்பவர்,எடுத்துக்கொண்டு சூட்கேஸ் உரிமையாளர் அமர்ந்திருக்கும் திசைக்கு வடக்குப் பக்கம் செல்வார். அதன்பின், 50 மீட்டரில் அந்த சூட்கேஸ் இன்னொரு நபரிடம் கை மாறும். இப்படிதான், 3 நிமிடங்களுக்குள் மிகவேகமாக 10 நிமிடங்களுக்குள் கை மாற்றுவர். இவர்களில் யாராவது ஒருவர் பிடிபட்டால் கூட, அடித்து உதைத்துவிட்டு தப்பமாட்டார்கள். மேலும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள், தமிழ்நாட்டில் கொள்ளையடிப்பது இல்லை. முழுக்க முழுக்க வடமாநிலங்களில் தான் கொள்ளையடிப்பார்கள். கத்தியில்லாமல் யுத்தம் இல்லாமல் கொள்ளையடிப்பார்கள்’’என்றார்.
பவாரியா கும்பல் கொலை செய்து திருடும் என்பதுபோல் இந்தக் கும்பல் முழுக்க அகிம்சை வழியில் திருடும் யுக்தியைக் கையாள்கின்றனர்.

டாபிக்ஸ்