தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
“திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்ததால், சமூக அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய வினோதா, பிறந்த உடனேயே குழந்தையை வீட்டு வாசலில் குழிதோண்டி உயிரோடு புதைத்தார்”

புதுக்கோட்டை மாவட்டம் உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது நர்சிங் மாணவி, தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பெண் குழந்தையை வீட்டு வாசலில் உயிரோடு புதைத்த சம்பவத்தில், அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நர்சிங் மாணவியின் செயல்
இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி , கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். திருமணமாகாத நிலையில், தனது காதலன் சிலம்பரசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கர்ப்பமடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த அவர், தந்தை வெளிநாட்டில் இருக்கும் சூழலில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ நடைமுறைகளைப் பயின்றிருந்ததால், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.