மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நேற்று (12/05/2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டும் அல்லாது பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மட்டும் மதுரையில் இருந்து 210 டன் அளவுள்ள குப்பை அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் இருக்கும் கள்ளழகர் கோயில் உலக அளவில் பிரசித்த பெற்ற ஒரு இடமாகும். இங்கு ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அழகரை வணங்கி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் தான். இதனை காண தமிழ்நாடு மட்டும் அல்லாது வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று (12/05/2025) மதுரையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை பெரும் கொண்டாட்டத்துடன் கண்டுகளித்த மக்கள் டன் கணக்கில் குப்பையை போட்டு விட்டு சென்றுள்ளனர்.
கூட்ட நெரிசலில் உயிரிழப்பு
கோலாகலமாக நடந்து முடிந்த சித்திரை திருவிழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தால் இருவர் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் நின்று அழகரை தரிசித்த திருநெல்வேலியை சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை கொண்டு செல்லவும் இந்த கூட்டம் பெரும் சவாலாக இருந்தது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.