செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருப்பம்.. போலீஸ் சொன்ன பகீர் பின்னணி!
போலீசாரின் விசாரணையில் பாதிக்கப்பட்ட நேசபிரபு திருப்பூர் வீர்பாண்டி அய்யம்பாளையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சபரிவிஜய் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இரவில் வீட்டில் இருந்தபோது சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்தவர் போலீசாருக்கு போன் செய்து பாதுகாப்பு கேட்டுள்ளார். ஒருக்கட்டத்தில் நேசபிரபுவை மர்ம கும்பல் நெருங்கியபோது, பதறி அடித்து கொண்டு பெட்ரோல் பங்கில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அப்போது வாகனங்களில் இருந்து கீழிறிங்கிய மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்தனர்.
செல்போனில் கதறியபடி ஓடி, பெட்ரோல் பங்க் மேலாளர் அறையில் நுழைந்தவர் கதவை தாழிட்டுள்ளார் . ஆனால் பின் தொடர்ந்து வந்த கும்பல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று நேசபிரபுவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். கொலைவெறித் தாக்குதலில் தலை, கை மற்றும் காலில் பலத்த வெட்டு காயமடைந்த நேசபிரபு, ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதனைத் தொடர்ந்து பயங்கர வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கைகள் மற்றும் நெஞ்சுப்பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் இதையடுத்து போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
முன்னதாக அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை சிலர் பின் தொடர்வதாகவும் உயிருக்கு ஆபத்து என பலமுறை தெரிவித்தும் கடைசிவரை மெத்தனமாக செயல்பட்டதாக போலீசார் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனிப்படை போலீசார் இன்று மாலை, சம்பவத்தில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த பிரவீன் (27) மற்றும் திருப்பூரை சேர்ந்த சரவணன் (23) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட நேசபிரபு (30) , பாலியல் தொழிலாளியிடம் சென்று, திருப்பூர், வீர்பாண்டி அய்யம்பாளையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சபரிவிஜய் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
மேற்கண்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சபரிவிஜய்யின் கூட்டாளிகள் என்பதும், சபரிவிஜய் ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 3 நாட்களுக்கு முன் பல்லடம் ராயர்பாளையத்தில் நேசபிரபுவிடம் பணம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் போது நேசபிரபு பிரவீனை தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும். இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட பிரவீன், சரவணன் மற்றும் பலர் சம்பவ இடத்திற்குச் சென்று நேச பிரபுவை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்