Diwali firecracker: பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்த 19600 பேர்! நேற்று மட்டும் 100 டன் குப்பை அகற்றம்!
”வழக்கமாக சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்துநாள்தோறும் 6850 மெட்ரிக் டன் கழிவுகள் எடுக்கப்படுகிறது”
தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக 19 ஆயிரத்து 600 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசுகளை வெடிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற விதி இருந்த நிலையில் விதிகளை மீறி பல்வேறு இடங்களில் பட்டாசுக்கள் வெடிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் 19 ஆயிரத்து 600 பேர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பட்டாசுக்கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளில் கடந்த 11ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் 13ஆம் தேதியான இன்று இன்று இரவுடன் முடிவடையும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்துநாள்தோறும் 6850 மெட்ரிக் டன் கழிவுகள் எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் பட்டாசு 275 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நேற்று இரவு வரை சென்னையில் 100 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு முறைகளில் பட்டாசு கழிவுகளை சென்னை மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. நேரடியாக வீடுகளில் தனியாக பிரித்து தரும்படி சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதுமட்டுமின்றி தெருக்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுக்களை தனியாக சுத்தம் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்