Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவ படையினர்!-15 companies of paramilitary forces to arrive on march 01 in tamilnadu - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவ படையினர்!

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவ படையினர்!

Karthikeyan S HT Tamil
Feb 26, 2024 07:34 PM IST

மக்களவை தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ராணுவம்
துணை ராணுவம்

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.

தொகுதிப்பங்கீடு, கூட்டணி என அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், "தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஓட்டுக்காக பணம், மது, பரிசுப் பொருட்கள் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். குறிப்பாக, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அதிக அளவில் சிசிடிவி பொருத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை குவிக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்துக்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவைகளுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அவற்றுள் 15 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 1 அன்றும் 10 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினர் 2024 மார்ச் 7 அன்றும் தமிழகத்துக்கு வழங்கப்படவுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.